கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், மூன்று முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா என நால்வரது வெண்கலச் சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.
முன்னதாக கரூர் வந்தடைந்த அவருக்குப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அதிமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்கள்தான் என் முதலமைச்சர்
பின்னர் நிகழ்ச்சியில் ஈபிஎஸ் பேசுகையில், "நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இல்லை என மு.க. ஸ்டாலின் பேசிவருகிறார், நான் எப்பொழுதும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று நினைத்ததில்லை. மக்கள்தான் என் முதலமைச்சர்.
ஸ்டாலின் காலை எழுந்தது முதல் தூங்கும் வரை தான்தான் முதலமைச்சர், முதலமைச்சர் எனக் கூறிவருகிறார். அவர் கனவில்கூட முதலமைச்சராக முடியாது. ஸ்டாலின் ஆளுநரிடம் நான் ஊழல் செய்ததாகப் புகார் அளித்துள்ளார்.
போடாத சாலையில் ஊழல் - ஸ்டாலின் கண்டுபிடிப்பு
அப்புகாரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட டெண்டரில் முறைகேடு எனத் தெரிவித்துள்ளார். அந்த டெண்டர் ரத்துசெய்யப்பட்டு கடந்த மாதம்தான் மீண்டும் விடப்பட்டுள்ளது.
இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை, அதற்குள்ளே சாலை போடப்பட்டதாகவும், போடப்பட்ட சாலையில் ஊழல் நடந்திருப்பதாகவும் திமுக தலைவர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இதுதான் கடைந்தெடுத்த பொய், மிகப்பெரிய பொய். போடாத சாலையில் எப்படி ஊழல் செய்ய முடியும்.
பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் என் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாது. வேண்டுமென்றே என் அரசு மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அவதூறு பரப்புரை, பொய்ப் பரப்புரை செய்து மக்களை நம்பவைக்க வேண்டும் என்று திமுக முயற்சிக்கிறது.
திமுக ஆட்சியில் ஒருவருக்கே டெண்டர்!
அது ஒரு காலமும் நடக்காது. எனவே தாய்மார்களே உண்மை, தர்மம், நீதிதான் எப்போதும் வெல்லும். நேற்றுகூட (பிப். 20) துரைமுருகனை வைத்து ஆளுநரிடம் மீண்டும் ஒரு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து புகார் அளித்துள்ளனர். நான் தற்பொழுது முதலமைச்சராகவும், பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபொழுது 220 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. அது சம்பந்தமான ஆவணங்களை வைத்துள்ளேன். ஒரே நபருக்கே தொடர்ந்து டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதேபோல புதிய தலைமைச் செயலகம் கட்ட 210 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு இறுதியாக 410 கோடி ரூபாய் தொகை வழங்கப்பட்டுள்ளது, இது ஊழல் இல்லையா?" என திமுக மீதும் அதன் தலைவர் ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படிங்க: முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து பதவிக்கும் தகுதியானவர் ஸ்ரீதரன் - கேரள பாஜக தலைவர்