கரூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு பாஜக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி தலைமையில் நேற்று (ஜூன்.28) நடந்தது.
பெட்ரோல் விலையில் மாறுபாடு
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு மாநில பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: 'திமுக பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துவிட்டு, அமைதி காக்கிறது. தமிழ்நாடு நிதியமைச்சரிடம் கேட்டால், எப்போது குறைப்போம் என நேரம் தெரிவிக்கவில்லை என அலட்சியமாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை.
பெட்ரோல், டீசல் மீதான வருவாயை 37 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை ஒவ்வொரு மாநிலங்களும் உயர்த்தியுள்ளன. விலை உயர்வைக் கணக்கில்கொண்டு மற்ற மாநிலங்கள் விலையைக் குறைத்துள்ளபோது, ஏன் தமிழ்நாடு அரசு வரியைக் குறைக்க முன்வரவில்லை. மக்களுடைய எண்ணங்களை தமிழ்நாடு அரசு அவமதித்து வருகிறது.
பெட்ரோல் விலையில் அரசியல்
தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் ஒன்றிய அரசு புதிய இடங்களில் பெட்ரோல் இறக்குமதி மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள பரிசீலித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை அரசியல் ஆக்காமல், மக்களின் சிரமங்களை உணர்ந்து மாநில அரசு வரியைக் குறைக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலையை ஈடுகட்ட மன்மோகன் சிங், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோர் ஆயில் மார்க்கெட்டிங் பாண்ட் (OMB) முறையில் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டினர்.
அப்போது திரட்டப்பட்ட பத்திரங்களுக்கான அசல் மற்றும் வட்டித்தொகையினை ஒன்றிய அரசு இன்றைய நாள் வரை செலுத்தி வருகிறது.
இதற்காக, ஒன்றிய அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் செலுத்துகிறது. எனவே, ஒன்றிய அரசு வரியைக் குறைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.