தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"400 இடங்களுக்கு மேல் வென்று மீண்டும் மோடி பிரதமராவார்" - அண்ணாமலை! - Annamalai

நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அமரப்போவது நிச்சயம் என கரூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அமரப் போவது நிச்சயம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 2:40 PM IST

Annamalai Press Meet

கரூர்: பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நேற்று (நவ. 3) 53வது நாளாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.

தொடர்ந்து, யாத்திரையானது கரூர் - திருச்சி நெடுஞ்சாலை அமைந்துள்ள டோல்கேட் வழியாக மில்கேட் மற்றும் தான்தோன்றி மலை பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது. இந்த பாத யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து, பாத யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, "தமிழகத்தின் ஏழை என்ற ஜாதியை இருக்கக் கூடாது என்பதற்காக பாஜக தலைவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதற்காக ஆட்சி நடத்துகிறார்கள். 234 தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி மட்டும் புழல் சிறையில் இருக்கிறார். இந்தியாவிலேயே சில எம்.எல்.ஏக்கள் மட்டும் தான் அமைச்சர்களாக இருந்து கொண்டு சிறையில் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மக்களின் பிரச்சினைகளை கேட்பதற்கு எம்.எல்.ஏ இல்லாத தொகுதியாக கரூர் தொகுதி உள்ளது. அதனால் திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் எம்.எல்.ஏ என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, இந்தியாவின் ஜனாதிபதி என்று நினைத்துக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், முக்கிய நபராக இருந்த கரூர் மேயர் வழக்கிலிருந்து தப்பித்துக் கொண்டதாக நினைக்கிறார்.

குடிநீர் தேவைக்காக கர்நாடகா அரசிடம் குடிநீர் கேட்டு பெறவேண்டிய தமிழக முதலமைச்சர், இந்தியா கூட்டணி என்ற பெயரில் அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மக்களின் குடிநீர் தேவைக்காக ஏன் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் முதல்வரிடம் காவிரியில் தண்ணீர் வழங்க கோரி கோரிக்கை வைக்கவில்லை. கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி என்ன சாதனையை செய்தார் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கரூர் நகரத்திற்கு எம்.பியும், எம்.எல்.ஏவும் சரியில்லை.

நீட் தேர்வை திமுக ரத்து செய்து விடும் என மக்களையும், மாணவர்களை ஏமாற்றி வரும் தமிழக முதலமைச்சர் ஏன் உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. ஏனென்றால், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியாது என மறுத்து விடும் என்ற அச்சம் திமுகவுக்கு உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. ஒன்றரை லட்சம் தொண்டர்கள் கொண்ட திமுக கட்சியில் 14 நாட்களில் மூன்று லட்சம் கையொப்பம் மட்டுமே பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் நீட் தேர்வுக்கு எதிராக இல்லை. நீட் தேர்வு வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

தொடர்ந்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, கிராமத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு தலைவர்கள் வரவேண்டும் என பாஜக நினைக்கிறது. ஆனால், திமுக போன்ற கட்சி தனது தலைமுறைக்கு பிறகு, குடும்பத்தில் உள்ள அடுத்த தலைமுறை பதவிக்கு வர வேண்டுமென்று பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஊழியம் செய்வதற்கு திமுகவில் தனி கூட்டம் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி தேசம் தேசம் என்று கூறினால் திமுக, அ.தி.மு.க குடும்பம் குடும்பம் என்று கூறுகிறது. நாட்டில் நேர்மையான ஆட்சி வரவேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

அமலாக்கத்துறை சோதனை தமிழக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடையவர்கள் வீட்டில் நடைபெற்று வருகிறது. அவர் அரசியலுக்கு வரும் முன்னர் என்ன பணி செய்து வந்தார். அரசியலுக்கு வரும்போது பூஜ்ஜியமாக இருந்த வேலு, திமுக ஆட்சிக்கு வந்ததும் இரண்டு மருத்துவக் கல்லூரிகளை கட்டி நிர்வகிக்கும் அளவுக்கு பணம் சம்பாதித்து உள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் திறந்து வைத்தவர் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது. அரசியலில் சம்பாதித்து மக்களை ஏமாற்றும் வேலையை திமுக அமைச்சர்கள் செய்து வருகின்றனர். இதனால்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாநகராட்சி மேயர் பாரதிய ஜனதா கட்சியின் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை சென்றபோது, திமுக தாக்கிய வழக்கில் முதல் குற்றவாளி என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும். பாஜக புகார் கொடுக்க தயாராகி விட்டது. மேயர் எங்கும் தப்பி செல்ல முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் தான் இருக்கிறார். என்பதை கரூர் மேயர் கவிதா உணர்ந்து செயல்பட வேண்டும். வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கு நிச்சியம் சிபிஐ விசாரிக்கும். அப்பொழுது மேயர் கவிதா நிச்சயம் சிறைக்கு செல்வார்.

இந்தியாவில், எந்த மாநகராட்சியிலும் ரூபாய் 25லட்சத்திற்கு பேனா, பென்சில் வாங்கியதாக கணக்கு காட்டி இருக்க மாட்டார்கள், ஆனால் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா மாநகராட்சி கூட்டத்தில் ரூ.25 லட்சத்திற்கு பேனா பென்சில் வாங்கியதாக கணக்கு காண்பித்துள்ளார். கரூர் திருமாநிலையூரில் மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதனை மக்கள் வரிப்பணத்தில் இருந்து மாநகராட்சி செலுத்தி உள்ளது.

இந்தியாவில் எந்த மூளைக்கு சென்றாலும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக, தேர்தல் நிறுத்தப்பட்டது, வருமானவரித்துறை அதிகாரிகளே தாக்கியது உள்ளிட்டவை நடைபெற்ற ஊர் என்று கேட்கும் அளவிற்கு கரூர் மாவட்டத்தின் பெயரை கெடுத்துள்ளனர், இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனையாக உள்ளது. கரூர் மாவட்டத்தில் போதைப்பழக்கம் அதிகரிக்க, கிராமப்புறங்களில் அதிக அளவு மது கடைகளை திறந்து மக்களை சிந்திக்க விடாமல் செய்யும் வித்தையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அமரப் போவது நிச்சயம்" என்று அண்ணாமலை கூறினார்.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் மின்னல் தாக்கி இருவர் பலி!

ABOUT THE AUTHOR

...view details