தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பாவேந்தரின் புகழை நிலைநாட்ட மணிமண்டபம் வேண்டும்!’

கரூர்: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மணி மண்டபம் கட்டுவதோடு, அவரது அனைத்து நுால்களையும் நாட்டுடைமையாக்க வேண்டும் என்று பாரதிதாசனின் பேரன் இளமுருகு வலியுறுத்தியுள்ளார்.

BHARATHIDASAN

By

Published : Apr 29, 2019, 9:42 AM IST

Updated : Apr 29, 2019, 11:37 AM IST

பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். கனகசபை - இலக்குமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். இவர் பாரதியார் மீது கொண்ட பற்றால் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். இவரது எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் எனவும் அழைக்கப்பட்டார். குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

பாரதிதாசன் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், நுால்கள் என பல வடிவங்களில் தமிழ் மொழியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியுள்ளார். இவருடைய படைப்பான “பிசிராந்தையார்“ என்ற நாடக நுாலுக்கு 1969ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசால் 1990இல் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. இவர் ஏப்ரல் 21, 1964ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இவருக்கு சரஸ்வதி கண்ணப்பன், வசந்தா தண்டாயுதபாணி, ரமணி சுப்பிரமணி ஆகிய மூன்று மகள்களும், மன்னர் மன்னன் என்ற மகனும் என மொத்தம் நான்கு பிள்ளைகள். இதில் சரஸ்வதி கண்ணப்பனுடைய மகன் இளமுருகு, கரூரில் வசித்து வருகிறார். இவர் தனத தாத்தா பாவேந்தர் பாரதிதாசனுடைய பிறந்தநாளையொட்டி, நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, பாரதிதாசனின் உடல் பொதுவான இடுகாட்டின் நடுவில் அடக்கம் செய்யப்பட்டதாகவும், அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு அவருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும் எனவும் புதுவை அரசிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும், “அவர் எழுதிய நுாலில் 70 விழுக்காடு நுால்கள் மட்டும் தான் நாட்டுடமையாக்கப்பட்டதே தவிர, மீதமுள்ள பாரதியார் சுயசரிதை, திருக்குறள் உரை உள்ளிட்ட நுால்களை இதுவரை அரசு கைப்பற்றவில்லை. இதனை வேறு யாரோ கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். தமிழர்கள் மற்றும் உலக மக்கள் பயன்பெறும் வகையில் அத்தனை படைப்புகளையும் பொதுவுடைமையாக்க வேண்டும்” என்றார்.

பாவேந்தர் பாரதிதாசன்-பேரன் இளமுருகு

பாவேந்தர் பாரதிதாசனின் 129ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Last Updated : Apr 29, 2019, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details