கரூர்:கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கரூர் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் அருகே தவிட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் மினி ஆட்டோ ஒன்று முட்டை அட்டைகளை அங்குள்ள கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அப்போது, கரூர் - சேலம் நெடுஞ்சாலை வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து சபரிமலை நோக்கி பக்தர்கள் சென்ற ஜீப் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி ஆட்டோ மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சம்பவ இடத்தில் வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாலும் ஐயப்ப பக்தர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கெடு இருந்தும் மின் இணைப்பை துண்டித்த உரிமையாளர்.. கரூரில் வாடகை வீட்டு குடும்பத்தின் அவலம்!