கரூர்:நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜக கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 இடங்களில் 41இடங்களிலும், குளித்தலை, பள்ளப்பட்டி, புகலூர் உள்ளிட்ட மூன்று நகராட்சிகளில் உள்ள 27 இடங்களிலும், 8 பேரூராட்சிகளில் 31 வார்டுகளிலும் என மொத்தம் 105 இடங்களில் தனித்து தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
கரூரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (பிப். 12) கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, லைட் ஹவுஸ் கார்னர், ராயனூர், குளித்தலை பேருந்து நிலையம், அரவக்குறிச்சி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரூர் மாநகராட்சி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பேசிய அண்ணாமலை, "இந்தியா முழுவதும் 172 கோடி தடுப்பூசி முறையாக அனைவருக்கும் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தி வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது, மத்திய பாஜக அரசு. ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் மஞ்சள் தூளுக்குப் பதிலாக மரத்தூள், மிளகுத் தூளுக்குப் பதிலாகப் பருத்திக்கொட்டை ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.
திமுக ஆட்சி அமாவாசையில் நீடிக்கிறது!
பொங்கல் பொருட்களுடன் பூச்சி, புழு, கரப்பான், பல்லி உள்ளிட்ட அசைவ வகைகளை வழங்கியுள்ளனர். பொங்கல் தொகுப்பில் வழங்க வேண்டிய ஆயிரம் ரூபாய் எங்கே என்று தமிழ்நாட்டு முதலமைச்சரின் பட்டத்து இளவரசர், உதயநிதி ஸ்டாலினிடம் கரூரில் பொதுமக்கள் கேட்டால், இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது எனக் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு, இதே கேள்வியைக் கேட்டால் இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது எனக் கூறுவார். திமுக ஆட்சி இன்னும் எத்தனை அமாவாசைக்கு ஆட்சியில் நீடிக்கும் என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது நகைக் கடன் ரத்து என்று அறிவித்துவிட்டு தமிழ்நாடு சட்டசபையில் 73 சதவீத பெண்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி வழங்க முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், பிரதமர் மோடி ரூ. 172 கோடி பேருக்கு முறையாகத் தடுப்பூசியை வழங்கியுள்ளார்.
மறைமுகமாக செந்தில்பாலாஜியை சாடிய அண்ணாமலை
மத்தியில் நேர்மையான ஆட்சியை வழங்கிவரும் மோடியைப் போல், கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்மையானவர்கள். இவர்கள் யாரிடமும் பேருந்தில் டிரைவர், கண்டக்டர், பணி வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடவில்லை. நேர்மையாக இருக்கக்கூடியவர்கள் உங்கள் மாநகராட்சி பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.