கரூர்:அதிமுக மாவட்ட தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளாக சின்னகோதூர் பகுதியைச் சேர்ந்த கே.என்.ஆர் சிவராஜ் (எ) சிவக்குமார்(42), புகலூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பசுபதி செந்தில் ஆகிய இருவவர் உள்ளனர். இவர்கள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் 13.12.2020 அன்று நடைபெற்ற எழுத்து தேர்வு எழுதிய திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த சுசீந்திரன் என்பவரிடம் ரூ.12 லட்சம் கொடுத்தால் பணி ஆணை பெற்று தருவதாக பணம் பெற்றுள்ளனர்.
பின்னர் போலி நியமன ஆணையை வழங்கியதுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக காலதாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த சுசீந்திரன் இதுகுறித்து, தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் நேரடியாக சென்று விசாரித்த போது, நியமன ஆணை போலியானது எனத் தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து கடந்த அக்.7 ம் தேதி கரூர் சின்னகோதூரில் உள்ள சிவக்குமாரை சந்தித்து கேட்டபோது, தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகக் கூறி சுசீந்திரனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், தனக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதுடன் பணத்தை திரும்ப பெற கேட்டபோது, மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.