கரூர்:கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தல் ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டு 6வது முறையாகக் கடந்த டிச. 19-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்தம் உள்ள 12 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களில் சம பலத்தில் அதிமுக, திமுக தலா 6 உறுப்பினர்கள் எண்ணிக்கை பலத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய தினம் அதிமுக கரூர் மாவட்டச் செயலாளர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் 6 பேரைத் திண்டுக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து இருந்தார்.
இதனால் அதிமுக உறுப்பினர்கள் வருகை தந்தால் மட்டுமே தேர்தல் நடத்தப் போதையை எண்ணிக்கை இருக்கும் என்ற நிலை உருவானது. ஏற்கனவே 5 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு, போதிய உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் பங்கேற்காத நிலையில் டிச.19-ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் தேர்தலில் முறைகேடு நடைபெறக்கூடாது என்பதற்காக அதிமுக தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு, தேர்தல் முடிவுகளை நீதிமன்றம் மூலமே வெளியிட வேண்டும் என உத்தரவு பெறப்பட்டது.
இதனை அடுத்துத் தேர்தல் நாளன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திண்டுக்கல்லிலிருந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவருடன் வந்த கரூர் மாவட்ட ஊராட்சி குழு அதிமுக உறுப்பினர் திரு.வி.க மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தலை நடத்த விடாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சதி செய்வதாகக் கூறி திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பினர்.