கரூர்:கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரூர், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, காந்திகிராமம், கணபதிபாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் பேரில், காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது,போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கரூர் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மகேந்திரன் (37), என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மகேந்திரன் கரூர் அதிமுக மத்திய நகர பாசறை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் மகேந்திரன் இதனிடையே கைது செய்யப்பட்ட மகேந்திரனை விடுவிக்க கோரி கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களையும் கைது செய்ய இருப்பதாக கூறியதால், போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். கரூரில் அதிமுக பிரமுகர் போதை மாத்திரை விற்றதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விமானப்படையில் வேலை எனக்கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த நபர் கைது!