கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி செய்தி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் கருத்துக் கணிப்புகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த பீப்புள்ஸ் டேட்டா ஃபேக்டரி என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கரூர் மாவட்டத்தில் தேர்தல் கருத்துக் கணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, அதிமுகவினர் அவர்களைத் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பீப்பிள்ஸ் டேட்டா ஃபேக்டரி நிறுவனத்தின் இயக்குநர் பாலமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கரூர் மாவட்டத்தில் தேர்தல் கருத்துக் கணிப்பில் எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த நான்கு நாள்களாக ஈடுபட்டுவருகின்றனர்.
மார்ச் 30ஆம் தேதி கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரிய காளிபாளையம் பகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் தங்கள் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. கருத்துக்கணிப்பு செய்தவர்கள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் தேர்தல் பரப்புரையை செல்போனில் காணொலியாகப் பதிவுசெய்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த அதிமுக பிரமுகர் கோவர்தன் என்பவர் கருத்துக் கணிப்பு நடத்தியவர்களைத் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்றார். அத்துடன் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் வாங்கல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றனர்.