கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ரூ 244.41 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியிலும் அமைச்சர் ஆய்வு நடத்தி உள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டோம்.
கரூரில் 29 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், 19 ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் உள்ளன. பள்ளிகளில் 2,266 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். கடந்தாண்டு மாவட்டத்தில் 12,952 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.62 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு என்னென்ன வசதிகள் தேவை, காலிப்பணியிடங்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும்போது தேவையான வசதிகள், பணியிடங்கள் நிரப்பப்பட்டு முழுமையாக செயல்பட தயாராக இருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு கொல்லிமலை பகுதியில் மாணவர்களுக்கு நெட்வொர்க் கிடைக்காததால் அங்கு டவர் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், நடப்பு கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கொண்டுவரப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 2,405 பேருக்குக் கரோனா பாதிப்பு