தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் சமூக ஆர்வலர் கொலை குறித்து உண்மை கண்டறியும் குழு ஆய்வு

க.பரமத்தி அருகே சமூக ஆர்வலர் கொலை குறித்து 10 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சமூக ஆர்வலர் கொலை குறித்து... 10 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஆய்வு
Etv Bharatசமூக ஆர்வலர் கொலை குறித்து... 10 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஆய்வு

By

Published : Sep 18, 2022, 7:12 PM IST

கரூர்: பரமத்தி அருகே உள்ள காளிபாளையம் பகுதியைச்சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி கல்குவாரி உரிமையாளர் செல்வகுமாரால் திட்டமிட்டு வாகனத்தை ஏற்றிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக குவாரி உரிமையாளர் செல்வகுமார் உள்ளிட்ட மூவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மை கண்டறியும் குழு:இந்நிலையில் கரூரில் சமூக ஆர்வலர் கொலை வழக்குத் தொடர்பாக மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது, மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன், மதுரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் மோகன், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் சார்பில் ஆசீர் , சுயாட்சி இந்தியா கட்சியின் தேசிய தலைவர் கிறிஸ்டினா சாமி உள்ளிட்டோர் அடங்கிய 10 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு முதல் கட்ட ஆய்வினை சமூக ஆர்வலர் ஜெகநாதன் வீடு மற்றும் கொலை செய்யப்பட்ட க.பரமத்திப் பகுதிகளில் செய்தனர். அப்போது பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கரூர் மாவட்ட கனிமவளத்துறை அலுவலகத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர்.

பின்னர், இதுகுறித்து பேசிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கட்சியின் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது கூறுகையில், 'கரூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர் ஜெகநாதன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் காளிபாளையம் பகுதி கிளைச்செயலாளராகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சமூக ஆர்வலராகவும் சமூக சேவை செய்து வந்துள்ளார். ஏற்கெனவே இரண்டு முறை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மூன்றாவது முறை கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற உண்மையை இக்குழு கண்டறிந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதி இன்றி கல்குவாரி நடத்தியதாக ஜெகநாதனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செல்வகுமார் மிளகாய்ப்பொடி தூவி சமூக ஆர்வலர் ஜெகநாதனை தாக்கியதாக க.பரமத்தி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் அது சாதாரண வழக்காக மாற்றப்பட்டது.

இது குறித்து ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்து, அதன் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர் ஜெகநாதன் அளித்த புகார் அடிப்படையில் கடந்த வாரம் செப் 9ஆம் தேதி கனிமவளத்துறை அலுவலர்கள் செல்வகுமார் நடத்திய அன்னை புளூ மெட்டல் கல்குவாரியை சீல் வைத்து மூடியுள்ளனர். சமூக ஆர்வலரை பழி தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூலிப்படையை வைத்து வாகனம் ஏற்றி கொலை செய்துள்ளார், செல்வகுமார்.

கரூரில் சமூக ஆர்வலர் கொலை குறித்து உண்மை கண்டறியும் குழு ஆய்வு

புகலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இன்று உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்தபோது, பல அதிர்ச்சிகரமான விதிமுறை மீறல்கள் இருப்பதை நேரில் கண்டோம். எனவே தமிழ்நாடு அரசு கல்குவாரிகளை ஆய்வு செய்வதற்கு தனியாக உயர்மட்டக் குழுவை அமைத்து விசாரணை செய்து அதன் அடிப்படையில் விதிமுறைகளை மீறி செயல்படும் அனுமதியற்ற கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்திட இக்குழு கேட்டுக்கொள்கிறது.

ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகளை ஆய்வு செய்வது பெரும்பாலான கல்குவாரிகள் அரசு அனுமதி பெறவில்லை; அரசு அனுமதி பெற்று இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட 50 அடி ஆழத்திற்கு மேல், வெடிவைத்து பாறைகளை வெட்டி எடுத்து, கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

சமூக அலுவலர் ஜெகநாதன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதை இக்குழு வரவேற்கிறது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கையைப் பாராட்டுகிறது. ஆனால், சமூக ஆர்வலர்கள், புகார் அளிக்கும் பொதுமக்கள் ஆகியோருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடராத வண்ணம் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரூரில் சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொலை வழக்கில் வேறு யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து காவல் துறை விசாரணையில் கண்டறிய வேண்டும் என இக்குழு கேட்டுக்கொள்கிறது.

பாதிக்கப்பட்ட ஜெகநாதன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணத் தொகையும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இக்குழு கேட்டுக்கொள்கிறது. உண்மை கண்டறியும் குழு அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறை, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இறுதி அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை

ABOUT THE AUTHOR

...view details