கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திண்டுக்கல் குஜிலியம்பாறை சாலையில் சாலையோரமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, “இரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட ஊர் கரூர். இந்த ஊர் வளர்ச்சி அடைய தமிழ்நாடு திராவிட மாடல் அரசு முன் நின்று செயல்படுத்தும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.
மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகள் உள்பட 1403 கிலோ மீட்டர் சாலையை தமிழ்நாடு அரசின் மூலம் பராமரிக்கப்படுகிறது. சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி - மேலப்பாளையம் பகுதியில் கடந்த 2012-13ஆம் ஆண்டில் 13.70 கோடி ரூபாயில் பாலம் கட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக இணைப்பு சாலை அமைக்கப்படாமல் பாலமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இணைப்பு சாலை அப்பகுதியில் உள்ள ஆறு கிராமங்கள் வழியாக 10 கி.மீ., தூரம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான அடிப்படை பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல, நெடுஞ்சாலை எண் 65 கரூர் நகரப் பகுதியில் பேருந்து நிலைய ரவுண்டானா நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளதால் அங்கே நகரம் படிக்கட்டு அமைக்கப்படும்” என்றார்.