கருணாநிதி் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் சுமார் 3 லட்சத்து,19ஆயிரத்து, 816 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 4 கோடி மதிப்பில் தலா 4 கிலோ அரிசி என 1,280 டன் அரிசியை பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தினை கரூர் தான்தோன்றி ஒன்றியத்திற்குட்பட்ட கோடங்கிபட்டி கிராமத்தில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூன் 3) தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கரூர்-கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அரிசி பேக்கிங் செய்யும் இடத்தினை ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
மக்களுக்கான திட்டங்கள்
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சராக பொறுபேற்ற நாள்முதல் மக்களுக்காக வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை வழங்கி வருகிறார். அதன்படி ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு, குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 4,000, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை செலவை அரசு ஏற்கும் என பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
கரூரில் 3 லட்சம் மக்களுக்கு 4 கோடி மதிப்பில் அரிசி வழங்கும் திட்டம் இன்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கரூர் மாவட்ட திமுக சார்பில் 4 கோடி மதிப்பீட்டில் 4 கிலோ தரமான அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம் இம்மாத இறுதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு விடும்" என தெரிவித்தார்.