கரூர்:புலியூர், கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் அன்பரசன் - சங்கரி தம்பதியினர். அன்பரசன் அப்பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களது இளைய மகன் பாரதி(10) கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகப் புலியூரில் இருந்து, தனது பாட்டி ஊரான புகலூர் அருகே உள்ள செம்படாபாளையத்தில் உள்ள வீட்டுக்கு பாரதி சென்றுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, சிறுவன் பாரதியும் அவரது சித்தப்பா மோகன்ராஜ்(40) ஆகிய இருவர் மட்டும், வீட்டில் ஒன்றாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்பொழுது சிறுவன் பாரதி, டிவி ரிமோட்டை தன் வசம் வைத்துக் கொண்டு, சித்தப்பாவிடம் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மோகன்ராஜ் அறிவாளால் சிறுவன் பாரதியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சிறுவன் பாரதி, சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வேலாயுதம்பாளையம் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.