கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (26). பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னையிலுள்ள பெண் மருத்துவர் ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி, நெருங்கிப் பழகியுள்ளார். அப்போது அவருடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுவிடுவதாகக்கூறி, மிரட்டிப் பணம் பறித்துள்ளார். இதையடுத்து அப்பெண் அளித்தப் புகாரின் பேரில், கோட்டார் காவல் துறையினர் காசியைக் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், காவல் துறையினருக்குப் பல திடுக்கிடும் தகவல்களும், ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. சென்னையைச் சேர்ந்த மருத்துவரைப் போன்று, இவர் பல போலி சமூக வலை தள கணக்குகள் மூலம் பெண்களைக் காதல் வலையில் சிக்க வைத்து தனிமையில் இருந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மேலும், கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் நடத்திய சோதனையில், செல்போன், லேப்டாப், ஒரு விலை உயர்ந்த கடிகாரம் மற்றும் இரண்டு ஹார்ட் டிஸ்க்குகள், ஏழு ஏ.டி.எம். கார்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். செல்போன், லேப்டாப்களில் ஆய்வு செய்ததில் ஏராளமான பெண்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், பெண்களுடனான உரையாடல்களின் தொகுப்புகளையும் சேகரித்து வைத்துள்ளார். இதையடுத்து, காவல் துறையினர் இவருடைய நண்பர்களின் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இவர், பல அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதால், அவர்களுக்கும் காசிக்கும் எந்த வகையில் தொடர்புள்ளது எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஆன்லைன் மூலமாக தொடர்புகொண்ட 25 வயது மதிக்கத்தக்க பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர், காசி குறித்துப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தன்னிடம் காதலிப்பதாகக்கூறி, காசி இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாகப் பழகி வந்ததாகவும், தன்னை திருமணம் செய்துகொள்வதாக நம்பிக்கை அளித்ததால், நெருக்கமாக இருந்த நேரங்களில் புகைப்படங்கள் எடுக்க அனுமதித்ததாகவும் கூறினார். மேலும், தன்னிடம் அவசரத் தேவைகள் இருப்பதாக அடிக்கடி பணம், நகை ஆகியவற்றை வாங்கிச் சென்றதாகவும், தற்போது தன்னுடைய நகைகளைத் திருப்பிக் கேட்டதால், தன்னுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.