கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பகுதியில் விளைகின்ற ரப்பர் உலகின் முதல் தர வரிசையில் இடம்பெற்றுள்ள ரப்பர் என்பதால், சர்வதேச சந்தையில் குமரி மாவட்ட ரப்பருக்கு வரவேற்பு அதிகம். அத்தகைய தொழிலில் அரசு ரப்பர் கழகம் தமிழக அரசு கீரிப்பாறை, குற்றியாறு, மயிலோடை உள்ளிட்ட குமரி மாவட்டம் முழுவதும் ஒன்பது கோட்டங்கள் இயக்கி வருகிறது.
இந்த ஒன்பது கோட்டங்களிலும் 3000க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ரப்பர் மரங்களில் இருந்து ரப்பர் பால் வெட்டி எடுத்து, அதனை பதப்படுத்தி ரப்பர் சீட்டுகளாக உருவாக்கும் பணிகளில் இந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடைய ஊதிய ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் இவர்களுடைய ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. 68 முறை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் வனத்துறை மற்றும் தொழிலாளர் துறை உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒரு ஊழியருக்கு 40 ரூபாய் கூலி உயர்த்தி கொடுக்கப்படும் என்று பேசி முடிவெடுக்கப்பட்டது.