கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோரை அறிமுகம் செய்து அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், “குமரி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த ஒரு உறுப்பினரைக்கூட தேர்ந்தெடுக்காததால் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்கிறார் முதலமைச்சர். ஓட்டுப் போடவில்லை என்பதற்காக மாவட்டத்தையே புறக்கணித்த முதலமைச்சரை நீங்களும் புறக்கணிக்க வேண்டும்.
பாஜக சார்பில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் அல்ல, அவர் பொய் ராதாகிருஷ்ணன். சென்றமுறை அவர் தேர்தலில் நின்றபோது, குளச்சலில் வர்த்தக துறைமுகம், கன்னியாகுமரி ஸ்மார்ட் சிட்டி, சாய் சாப் சென்டர், விவசாய கல்லூரி, புற்றுநோய் ஆராய்ச்சி மையம், திக்குறிச்சி கடற்கரை சுற்றுலாத்தலம், பெருஞ்சாணியில் படகு சவாரி, இந்துக்களுக்கு கல்வி உதவித்தொகை இப்படி எத்தனையோ சொன்னார். ஆனால், ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தும், இதில் ஒன்றையும் அவர் செய்யவில்லை.