சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், போதிய உணவின்றி, எவ்வித பராமரிப்புமின்றி, ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் ஏராளமான மனநோயாளிகள் சுற்றித்திரிகின்றனர்.
மனநோயாளிகளை பராமரிக்க அரசு இதைவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கன்னியாகுமரிக்கு வரும் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள இடையன்குளம் பகுதியில் தேசிய நற்செய்தி ஊழியத்தைச் சேர்ந்த ஜாஷ்வாசாலமன் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்பினர்கள் ஒன்றுசேர்த்தனர்.
மனநோயாளிகளை குளிக்க வைத்த தன்னார்வலர்கள் கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த மனநோயாளிகளை அழைத்துப் பேசி அவர்களின் ஒத்துழைப்புடன் மனநோயாளிகள் எட்டு பேருக்கு முடி வெட்டி, நன்றாக குளிக்கவைத்து, புதிய ஆடை அணிவித்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை வாங்கி கொடுத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பை சேர்ந்தவர் கூறியதாவது, அரசுப் பதவியில் இருந்து ஒய்வு பெற்ற ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரும் இந்த அமைப்பில் உள்ளோம். எங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டு மாதம் ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து இதுபோன்ற செயல்களை செய்து வருகிறோம். இந்த முறை கன்னியாகுமரியில் உள்ள மனநோயாளிகளை அவர்களின் ஒத்துழைப்புடன் முடிவெட்டி, குளிக்கவைத்து, உணவு வழங்கினோம் என கூறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
இதையும் படிங்க: மூதாட்டியின் பசி தீர்த்த காவலர் - வைரல் வீடியோ