கன்னியாகுமரி:குளச்சல் காவல் நிலையம் அருகேவுள்ள மதுபானக்கடையில் மது அருந்திய சில இளைஞர்கள் அந்தப் பகுதியில் உள்ள சாலையில் நின்றுகொண்டு அந்தபகுதி வழியாக சென்றவர்களிடம் வம்பிழுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அவரை பின் தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் சென்ற போதை இளைஞர் ஒருவர், புகார் அளிக்கச் சென்றவரை அங்கிருந்து விரட்டியடித்ததோடு காவல் நிலையத்தில் இருந்த காவலர்களையும் தாக்க முயன்றுள்ளார். காவலர்கள் காவல் நிலையத்திற்குள் இருந்து வெளியேறிய நிலையில், காவல் நிலையத்திற்குள் சுற்றி வந்த அந்த இளைஞரை அங்கு திரண்ட சில இளைஞர்கள் கைகளை கட்டி அழைத்துச்செல்ல முயன்றனர்.
ஆனால், அந்த இளைஞர் அடம் பிடித்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்த நிலையில், தகவலறிந்து அங்கு வந்த அவரது தாய் மற்றும் தந்தை அவரை அழைத்துச்செல்ல முயன்றனர். அப்போது அந்த இளைஞர் தனது தந்தையையும், தாயையும் காலால் மிதித்து சரமாரியாக தாக்கினார். ஒரு கட்டத்தில் தந்தை மகனை காலணிகளை கழற்றி, அடிக்கத் தொடங்கிய நிலையில் தந்தையும் மகனும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டனர்.