2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் கன்னியாகுமரியில் 33 மீனவ கிராமங்கள் முழுமையாக அழிந்தது. இந்த ஆழிப் பேரலை காரணமாக குமரி மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
15 ஆண்டுகள் ஆகியும் இந்த சோக வடுக்கள் மீனவர்களின் நெஞ்சைவிட்டு அகலாத நிலையே இன்றும் உள்ளது. உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக, குமரி கடற்கரை கிராமங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.
ஆண்டுகள் கடந்தாலும் அழியாத சோகம்:
மணக்குடி மீனவ கிராமத்தில் சுனாமியால் இறந்தவர்களின் நினைவாக, தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. சுனாமியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையும் விதமாக மீனவர்கள் கடற்கரையில் மலர்த்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சுனாமியால் உயிரிழந்தவர்களை கண்ணீருடன் நினைவுகூர்ந்த குமரி மக்கள் குமரி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 42 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் சுனாமி பேரலையில் உயிரிழந்த மீனவர்களின் துயர நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 15ஆவது ஆண்டு சுனாமி தினம்; மீளாத துயரத்தில் மக்கள்!