நாகர்கோவில் - நெல்லை மார்கத்தில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து கன்னியாகுமரி:நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நாகர்கோவில் - நெல்லை மார்கத்தில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இதனால் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் பேருந்து மூலமாக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் குறிப்பாக, தென் மாவட்டங்களில் கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழையானது நேற்று(டிச.17) நள்ளிரவு வரை தொடர்ச்சியாக பெய்தது. கிட்டத்தட்ட 25 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாகர்கோவிலில் அனைத்து இரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், செங்குளம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், நாகர்கோவிலில் இருந்து நெல்லை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி செல்லும் அனைத்து ரயில்களும் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியூர் செல்லும் பயணிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து மூலமாக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கனமழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், மழையால் பாதிக்கப்பட்டு அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து, குழித்துறை சப்பாத்து பாலம் பகுதி வழியாக செல்லும் தாமிரபரணி ஆற்றின் நீரின் அளவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் 1077-04652231077 என்ற எண்ணை அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அரிவித்துள்ளது.
இதையும் படிங்க:நெல்லையில் இரவு முதல் கொட்டி தீர்க்கும் மழை: மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்!