பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்.. கன்னியாகுமரி:சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், தற்போது முக்கியமான மூன்றாம் கட்ட சீசன் நிலவி வருகிறது. இந்த சீசனில் அதிக அளவில் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதுமட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்வர்.
இந்த நிலையில் இன்று பொங்கல் தினத்தை ஒட்டி கன்னியாகுமரிக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர். இன்று பொங்கல் தினத்தை ஒட்டி கன்னியாகுமரி முக் கடல் சங்கத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தைக் காண ஆர்வம் காட்டினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் வந்த சுற்றுலாப் பயணிகள் முக் கடல் சங்கமிக்கும் பகுதி, சன் வியூ பாய்ன்ட் ஆகிய பகுதிகளைக் கண்டு ரசித்தனர். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்த்தவாறு சூரிய உதயத்தைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு; 17 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம்!
தை முதல் நாள் மற்றும் பொங்கல் பண்டிகையான இன்று சூரிய உதயத்தைக் காண்பதற்காக ஆர்வம் காட்டிய சுற்றுலாப் பயணிகள் பின்னர் படகு மூலமாக விவேகானந்தர் நிறைவு பாறையைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். வழக்கமாகக் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறும். ஆனால் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன.15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் காலை 2 மணி நேரமும் மாலை 2 மணி நேரமும் படகு போக்குவரத்து நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று விவேகானந்தர் நினைவு பாறைக்குப் படகு மூலம் சென்று பார்வையிட்டு வந்தனர். அதேபோல மாலையும் வழக்கமாக மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து இன்று 6 மணி வரை நடைபெற்றது.
மேலும் கடலில் புனித நீராடிய சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர் விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கன்னியாகுமரி களைகட்டியது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதுவதால் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா! குடும்பத்துடன் பங்கேற்ற அதிகாரிகள்..!