கன்னியாகுமரி: இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, ஐந்திணைகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நான்கையும் ஒருகிணைந்த மாவட்டமாக திகழ்கிறது. மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கில் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்திய பெருங்கடலும் எல்லையாக கொண்டுள்ளது. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
பல வரலாற்று சின்னங்களை கொண்டிருக்கும் கன்னியாகுமரி, சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கமாக திகழ்கிறது. இங்கு, சன் செட் பாயிண்ட், கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை நினைவு மண்டம், திருவள்ளுவர் சிலை, முக்கடல் சந்திப்பில் அமைந்துள்ள காந்தி மண்டபம், பெரும் தலைவர் காமராஜர் நினைவு மணி மண்டபம், கன்னியாகுமரி அம்மன் கோயில், அரசு அருங்காட்சியம், பே வாட்ச் தீம் பார்க், மகாவீர் ஜெயின் கோயில் என எண்ணற்ற சிறப்பு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது.