உலகில் ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி 'உலக கடல் வழிப் பயண உதவி தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச கடல் பாதை வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல்கள், உள்நாட்டுக் கப்பல்கள், மீன்பிடி படகுகள் எனக் கடல் வழி செல்லும் அனைத்து ஊர்திகளுக்கு வழிகாட்டவும், கப்பல்கள் திசை மாறி செல்லாமல் இருக்கவும், கலங்கரை விளக்கங்கள் கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
குமரியில் ‘உலக கடல் வழிப் பயண உதவி தினம்’ சிறப்பு நிகழ்ச்சி - in history
கன்னியாகுமரி: 'உலக கடல் வழிப் பயண உதவி தினம்' ஆன இன்று குமரியில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இலவசமாக கண்டு களித்தனர். அவர்களுக்கு கலங்கரை விளக்கத்தின் செயல்பாடுகளும், அது அமைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தொடக்கக் காலங்களில் எண்ணெய் விளக்குகளால் செயல்பட்டுவந்த கலங்கரை விளக்கங்களில், பின்னர் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்டது. தற்போது அதிநவீன மின் ஒளிரூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 150க்கு மேற்பட்ட இடத்திலும், தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும் கலங்கரை விளக்கங்கள் உள்ளன.
இந்த தினத்தையொட்டி, குமரிக் கடற்கரைச் சாலையில் உள்ள கலங்கரை விளக்கத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியை, கலங்கரை விளக்க அலுவலர் பினோஜ், இதன் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு விளக்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகளைக் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு அழைத்துச் சென்று கலங்கரை விளக்கத்தின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினார். மேலும், இன்று மட்டும் கலங்கரை விளக்கத்தைக் காண வரும் அனைவருக்கும் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.