கன்னியாகுமரி:செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் நடைபயணம், 3,500 கிலோ மீட்டர் 149 நாட்கள் நடைபெற உள்ள நடைபயணத் தொடக்கம் குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
தவறான அரசியல், சமூக பொருளாதார கொள்கைகளை மக்களுக்கு எடுத்து செல்லும் விதமாகவும் விலைவாசி ஏற்றம், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றை விளக்கி கூறும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் நடைபயணம் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கவுள்ளனர்.
இது தொடர்பான இடம் தேர்வு குறித்து தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் இன்று (ஆக 12) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் செல்லகுமார், அகில இந்திய ஆலோசனை காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தேசிய அளவில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடிக்கு ஆலோசனை சொல்வதற்கு ஆட்கள் இல்லை..! கே எஸ் அழகிரி பேச்சு இந்தக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை அனுமதிக்காததால் சலசலப்பும் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மத்திய அரசு அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களில் ஜி.எஸ்.டி., வரி அதிகரிப்பதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வரி விதிப்பு சமூக நீதிக்கு எதிரானது. பிரதமர் மோடிக்கு நல்ல ஆலோசனை சொல்வதற்கு ஆட்கள் இல்லை. தவறான பாதையில் பயணிக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சியினர் சுவிஸ் வங்கியில் இருப்பது எல்லாம் கருப்பு பணம் இல்லை என்று இப்போது நிர்மலா சீதா ராமன் கூறுகிறார். இவர்கள் இதுவரை எவ்வளவு ரூபாய் கருப்பு பணத்தை மீட்டுள்ளார்கள்.
இவர்களது பொருளாதார கணக்கீடுகள் அனைத்தும் தவறானது. மத்திய அமைச்சரவையில் மாற்றம் வேண்டுமென்றால் முதலில் மோடியைத் தான் மாற்ற வேண்டும். 5 ஜி அலைக்கற்றையில் 5 லட்சம் கோடி வருமானம் வரும் என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போது ஒன்றரை லட்சம் கோடி வருமானம் வந்துள்ளதாக கூறுகிறார்கள். 2013 இல் 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக 2 ஜி அலைக்கற்றையில் கூறினார்கள். அப்படியானால் அறிவுப் பூர்வமான தவறு நடந்துள்ளது. தகுதி இல்லாதவர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார்கள்” என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திரதின விழா - 75 கி.மீ., தூரம் வரை நடந்துசெல்லும் ராணுவ வீரர்களின் பயணம் தொடக்கம்!