ஊரடங்கு உத்தரவின் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்கவேண்டும் என்றும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறக்கவேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில் தேரேகால்புதூர் பகுதியில் மளிகை பொருள்கள், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் நேற்று மதியம் தன்னை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எனக்கூறி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அவர் திடீரென சாலையிலிருந்த பொதுமக்களிடம் கூட்டம் போடாதீர்கள் என எச்சரித்துவிட்டு அப்பகுதியில் உள்ள கடைகள் முன்பு நின்று சிலரிடம் வரிசையாக நில்லுங்கள் என்று கூறினார்.
பின்னர், திடீரென அப்பகுதியில் உள்ள நடராஜன், கண்ணன், சிவதாணு உள்ளிட்டோரின் கடைகளுக்குச் சென்ற அவர், தான் நாகர்கோவிலுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எனக் கூறி கடைகளை ஆய்வுசெய்துள்ளார்.
பின்னர், கடை உரிமையாளர்களிடம் சிகரெட் விற்கக்கூடாது ஏன் விற்கிறீர்கள் எனக் கூறி நான்கு கடைகளிலிம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை மொத்தமாக தூக்கிச் சென்றுள்ளார்.
மேலும், நான்கு பேரும் கோட்டார் காவல் நிலையத்துக்கு வந்து சிகரெட் விற்கமாட்டோம் என எழுதிக்கொடுத்துவிட்டு சிகரெட் பாக்கெட்டுகளை வாங்கிச் செல்லுங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
சிகரெட் கொடுத்து ஏமாந்த கடை உரிமையாளர் இதையடுத்து ஒரு கடைகாரர் தனக்கு தெரிந்த காவல் துறையினரிடம் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது பேசிய காவலர் ஒருவர், புதிதாக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும், அவர் எவ்வாறு தனியாக வந்து சோதனை செய்வார். அவருடன் காவல் துறையின்ர் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
பின்னர், தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த நான்கு கடைகாரர்களும் கோட்டார் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எனக் கூறிய நபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி பைக் கொள்ளை: சிசிடிவி காட்சிகள்