கன்னியாகுமரி:தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மலர் சந்தையில் முக்கிய பூச்சந்தையாகக் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச் சந்தை விளங்குகிறது. கோவில்பட்டி ராஜபாளையம் , கொடைக்கானல் , திண்டுக்கல் , பெங்களூர் ,சேலம், ஓசூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து மல்லிகை பூ , பிச்சிப் பூ, மஞ்சள் கிரந்தி , வாடாமல்லி உள்ளிட்ட அனைத்து வகை கலர் பூக்களும் தோவாளை பூச்சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.
இங்குக் கொண்டு வரப்படும் பூக்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மிகப்பெரிய ஒரு பூ வர்த்தக மையமாக தோவாளை பூ சந்தை திகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பண்டிகை காலங்கள், முகூர்த்த காலங்கள் மற்றும் பல்வேறுபட்ட விசேஷ காலங்களில் பூக்களின் விலை இங்கு அதிகரித்துக் காணப்படும்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கிய நாள் முதல் பூக்களின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக பிச்சிப்பூ , மல்லிகைப்பூ உட்பட அனைத்து பூக்களும் விலையும் வீழ்ச்சி அடைந்து இருந்தது. இந்நிலையில், நாளை பங்குனி உத்திரம் என்பதால் பொதுமக்கள் குடும்பமாக வந்து கோவில்களில் விசேஷ பூஜைகள் , வழிபாடுகள் நடத்துவது வழக்கம். வழிபாடு நிகழ்வுகளுக்கு அதிக பூக்கள் பயன்படுத்தப்படுவதால், அனைத்து பூக்களும் விலை உயர்ந்துள்ளது.