நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி (27). அவர் பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் நெருங்கிப் பழகி அவர்களை ஆபாசமாகப் படம் எடுத்து அவர்களிடம் அந்தப் படத்தைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.
காசியின் மீது முதல் முதலாக சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சில இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர் மீது நேசமணி நகர் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பாலியல் வழக்கு பதியப்பட்டது.
மேலும் கந்துவட்டி புகாரின்பேரில் வடசேரி காவல் துறையினர் காசி மீது கந்துவட்டி வழக்கு பதிந்தனர். அவர் மீது மொத்தம் ஆறு வழக்குகள் பதியப்பட்டன. இதனைத் தொடர்ந்து காசியை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடமிருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். அதனை ஆய்வு செய்தபோது ஏராளமான இளம் பெண்களின் ஆபாச படங்கள் இருந்தன.
அது காசியுடன் நெருங்கிப் பழகிய பெண்களின் படங்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து காசிக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பர்கள் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
காசி விவகாரம்: சிபிசிஐடி வி்சாரணையில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்!
கன்னியாகுமரி: காசி விவகாரத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மாணவிகள், பெண்களின் படங்களை ஆபாசமாக சித்திரித்து மிரட்டியது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் காசி மீதான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. காசியை காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் துயைினர் விசாரணை நடத்தினர்.
இதில் ஆசை வார்த்தைக் கூறி இளம் பெண்கள், மாணவிகளை தனது வலையில் வீழ்த்தியது, அவர்களுடன் நெருங்கி இருப்பது போன்றவற்றை படம் எடுத்து அதைக் காட்டி மிரட்டி பணம் பறித்து இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காசி தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி காவல் துறையினர் ஈடுபட்டனர்.
கந்துவட்டி வழக்கில் காசி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இன்னொரு மாணவி ஒருவர் காசி மீது பாலியல் புகார் அளித்தார். அதில் தன்னை காதலிப்பது போல ஏமாற்றி பணம் பறித்ததாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதியப்பட்டது
அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி காவல் துறையினர் காசியை 5 நாள் காவலில் எடுத்தனர். அவரிடம் சென்னை மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி அவரை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்று விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சென்னையைச் சேர்ந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் காசி பழக்கம் ஏற்பட்டு, பின்பு காதலிப்பதாகக் கூறி சென்னைக்குச் சென்று மாணவியை காசி சந்தித்துள்ளார். மேலும் அந்த மாணவியை கன்னியாகுமரிக்கு வரவழைத்தார்.
அப்போது அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தைக் கூறி தனது காரில் வைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார். அதனை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து பின்னர் அதனை காண்பித்து மாணவியை மிரட்டி பணம் பறித்து விசாரணையில் தெரியவந்தது.
மேலும் காசியிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பை ஆய்வு செய்ய சென்னையிலிருந்து சைபர் கிரைம் வரவழைக்கப்பட்டு, லேப்டாப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காசி தன்னுடன் பழகிய இளம் பெண்களின் படத்தை ஆபாச படத்துடன் இணைத்து சித்தரித்து வைத்துள்ளார். இதுபோன்று பல பெண்களின் படங்களை சித்தரித்து காசி மிரட்டி இருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இதனால் அவரது கூட்டாளிகள் மற்றும் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இந்த வழக்கில் மேலும் சில சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.