கன்னியாகுமரி: 2017ஆம் ஆண்டு ஓகி புயலின்போது வானில் திசை மாறி கன்னியாகுமரி பகுதியில் காயமடைந்து வந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது ஓர் 'சினேரியஸ்' வகைக் கழுகு(Cinereous vulture). இந்தியாவில் அருகி வரும் இனமாகக் கருதப்படும், இந்தக் கழுகை குமரி மாவட்ட வனத்துறையினர் கடந்த 4 ஆண்டுகளாக உதயகிரி கோட்டை உயிரியல் பூங்காவில் கொண்டு சேர்த்து, சிகிச்சை அளித்து பாதுகாத்து வந்தனர்.
இதன் மீது ஜிபிஎஸ் கருவி பொருத்தி, அதனைக் கண்காணிக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நாளை(செப்.24) குமரி மாவட்டத்தில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்குக்கொண்டு செல்ல வனத்துறையினர் தயாராகி வருகின்றனர். மீட்கப்பட்டபோது, எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் வந்த 'சினேரியஸ் கழுகு', தற்போது புது வேகத்துடன் உற்சாகமாக தெம்புடன் காணப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறை அலுவலர் இளையராஜா கூறுகையில், 'சுமார் மூன்றரை அடி உயரம், பெரிய கண்கள், கூரான நுனி உடைய வளைந்த அலகு, கால் விரல்களில் கூரான நகம், பறக்கும்போது சிறகுகளின் அகலம், 6 முதல் 14 கிலோகிராம் வரை எடை என மெகா சைஸில் காணப்படும் இந்த கழுகுகள் விண்ணுயர பறந்து, தனது அபாரமான பார்வைத்திறனால் விலங்குகள், மீன்களை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும்.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்தக் கழுகுகள் குஜராத்திலேயே அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, சுமார் ஒன்றரை கிலோ வரை மாமிசமும் கொடுத்து, இந்தக் கழுகை பராமரித்து வருகிறோம்' எனத் தெரிவித்தார்.