கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மார்ட்டின் தாமஸ். இவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு கைத்துப்பாக்கியுடன் வந்துள்ளார். இதையறிந்த சக ஆசிரியர், மாணவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் தன்னை உளவுத்துறை அலுவலர் என்றும், இலங்கை தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பது குறித்து விசாரிப்பதற்காக மாவட்டத்தில் வலம் வருவதாகவும் பெயரளவில் அப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.