கன்னியகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு தற்போதுவரை சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. இந்நிலையில், வாடகை வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்கு உதவ அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஐந்து மாதங்களாக வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்துவருகின்றனர்.
தற்போது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரிசர்வ் வங்கி தவணை கட்டுவதில் விலக்கு அளித்துள்ளது. இருந்தும் பல தனியார் நிதி நிறுவனங்கள் கடன் பெற்று வாகனம் வாங்கியவர்களை தவணைத் தொகையை கட்டவலியுறுத்திவருகின்றன.
மேலும், தவணை கட்டாத பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்துவருகின்றனர். அரசால் விதிக்கப்படும் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் வரி, வாகனக் காப்பீடு மற்றும் எப்சி ஆகியவற்றிற்கான தொகையையும் செலுத்தவேண்டியுள்ளது. இதுபோன்ற பல பிரச்னைகாரணமாக வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சுமார் 50 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
எனவே, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பொதுமுடக்க காலத்திற்கு வாடகை கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் வரி, வாகன காப்பீடு மற்றும் எப்சி ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கவேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.
வாடகை ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நிவாரணம் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:அன்று ஆசிரியரிடம் அடி வாங்கியதால் தான் இன்று அறிவோடு பேசுகிறேன்': ராஜேந்திர பாலாஜி