கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது தொழில் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.17 லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடனை மாதம் தொறும் செலுத்தி வந்த கண்ணன், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட விபத்தால், வாங்கிய கடனை அவரால் சரிவர செலுத்த முடியவில்லை.
வட்டி செலுத்தாத காரணத்தால் கண்ணன் வீட்டை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் காவல்துறை, தோவாளை தாசில்தார் சொக்கலிங்கம் தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் துணையோடு வங்கி அலுவலர்கள் வீட்டை ஜப்தி செய்ய வந்துள்ளனர். அப்போது கண்ணனின் மனைவி குழந்தைகளுடன் அவமானம் தாங்காமல் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாசில்தார், வீட்டை ஜப்தி செய்ய வேண்டாம். அவருக்கு சில நாட்கள் அவகாசம் கொடுக்கலாம் என்று வங்கி அலுவலர்களிடம் தெரிவித்தார். ஆத்திரமடைந்த வங்கி அலுவலர் ஒருவர் தாசில்தாரின் சட்டையை பிடித்து, ஜப்தி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். இதற்கு மறுத்த தாசில்தார் வீட்டை விட்டு வெளியேறினார்.
குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்; ஜப்தியை நிறுத்திய தாசில்தார்! மற்றோரு வங்கி அலுவலர் வீட்டை ஜப்தி செய்யுமாறு கூறி நடுரோட்டில் வைத்து தாசில்தார் காலில் விழுந்து கதறி அழுது கண்ணீர் விட்டார். எனினும் தனக்கு வீட்டின் உள்ளே இருக்கும் உயிர்களே முக்கியம் எனக் கூறி ஜப்தி செய்யமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் ஜப்தி நடவடிக்கையில் இருந்து வங்கி ஊழியர்கள் பின்வாங்கியதோடு, பணத்தை செலுத்த கண்ணன் குடுமபத்தாருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி திரும்பி சென்றனர். தாசில்தாரின் மனிதாபிமான செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சி அடைய வைத்தது.