குமரி மாவட்டம், நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து வகையான விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.இதில் மாணவ மாணவியர்கள் பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
நீச்சல் பயிற்சி மாணவர்களிடம் கட்டாய பணவசூல்! - பெற்றோர்கள் குற்றசாட்டு
கன்னியாகுமரி: அரசு விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சிக்கு வரும் மாணவர்களிடம் கட்டாய வசூல் செய்வதாக, துறை அலுவலரிடம் புகார் அளித்த மாணவருக்கு கடுமையான பயிற்சிகள் கொடுத்ததால் உடல் நலம் பாதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு நீச்சல் பயிற்சிக்கு வரும் மாணவ மாணவிகளிடம் பயிற்சியாளர்கள் கட்டாய பண வசூலில் ஈடுபடுவதாக மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டு துறை அலுவலரிடம் புகார் அளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விளையாட்டுத் துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மூலமாக புகார் கொடுத்த மாணவருக்கு உடல் தகுதியை மீறி தண்டனையாக கடுமையான பயிற்சிகள் அளித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாணவரின் பெற்றோர் சென்னையில் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் சென்னையில் இருந்து அதிகாரிகள் வந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாக விசாரணை நடத்தினர். விளையாட்டுத் துறை அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.