டச்சு போர் வெற்றி தூணில் ராணுவ வீரர்கள் வீர வனக்கம் கன்னியாகுமரி:டச்சு படைகளை திருவிதாங்கூர் படைகள் வென்ற 282வது ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்த காலக்கட்டத்தில் இந்திய வளங்களை கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் டச்சுப் படை தென் மாநிலங்களைக் குறி வைத்து போர் செய்து வந்தது. அப்போது, பத்மநாபபுரம் அரண்மனையை கைப்பற்ற முயற்சி செய்தது.
1741ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிலனாய் தலைமையிலான டச்சுப் படை குளச்சல் கடல் பகுதியில் கடல் மார்க்கமாக கப்பலில் வந்து கடலில் முகாம் அமைத்து இருந்தது. இதனை அறிந்த மார்த்தாண்ட வர்மா தனது தளபதி அனந்த பத்மநாபன் தலைமையிலான மிக சிறிய படையுடன் குளச்சல் கடற்கரையில் முகாமிட்டு இருந்தார்.
மன்னரின் புத்திக்கூர்மை மற்றும் தந்திரத்தால் அங்குள்ள மீனவர்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான பனை மரங்களை கடற்கரையின் முன்பு வர்ணம் பூசி பீரங்கிகள் போன்று வடிவமைத்து அதனை மாட்டு வண்டிகளில் இணைத்து கட்டி வைத்து மீன்பிடிக்க பயன் படுத்தும் கட்டு மரங்களில் உள்ள மீனவர்களின் துடுப்பு களை கையில் கொடுத்து துப்பாக்கிகள் ஏந்தி நிற்பது போல் நிற்க வைத்தனர்.
இதைக் கண்ட டச்சுப் படையினர் மிகப்பெரிய பீரங்கிகள் மற்றும் துப்பாக்கி ஏந்திய படை வீரர்களுடன் மன்னர் மார்த்தாண்ட வர்மா தங்களை எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறார் என நினைத்து தளபதி டிலனாய் தலைமையில் வந்த டச்சுப் படையினர் மார்த்தாண்ட வர்மாவிடம் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெற்றியை பறைசாற்றும் வகையில் 1741ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி குளச்சலில் போர் நடைபெற்ற இடத்தில் ஒரே கல்லால் ஆன 20 அடி உயரம் கொண்ட விக்டரி என்ற வெற்றித் தூணை மன்னர் மார்த்தாண்ட வர்மா நிறுவி போரில் மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
இந்த வரலாற்றையும் போர் வெற்றியையும் நினைவுகூரும் வகையில் தமிழக அரசு குளச்சலில் உள்ள விக்டரி வெற்றித் தூணுக்கு ஆண்டுதோறும் ஜூலை 31ஆம் தேதி திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ தளத்தில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ வீரர்களால் மரியாதை செலுத்தப்படுகிறது.
அந்த வகையில் இன்று (ஜூலை. 30) 282வது ஆண்டு வெற்றி தினம் குளச்சலில் கொண்டாடப்பட்டது. அங்குள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த போர் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை செலுத்தினர். இந்நிகழ்சியில் திருவனந்தபுரம் ராணுவ தள பட்டாலியன் உயர் அதிகாரிகள், குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவ மக்கள் மற்றும் சமூக ஆர்வலர், ஊர் மக்கள் என பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க :அகமதாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றம்!