கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதில் பல வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து காணப்பட்டன. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட பல வாகனங்கள் காணாமல் போனதாகவும், காவல் நிலையத்தில் சில அலுவலர்கள் மற்றும் காவலர்கள் இடைத்தரகர்கள் மூலம் இந்த வாகனங்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சில தினங்களுக்கு முன் வழக்கமான ஆய்வு பணிக்கு வருவதுபோல மார்த்தாண்டம் காவல் நிலையத்தின் வாகன வழக்குகள் சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது பல இருசக்கர வாகனங்கள் மாயமானது தெரியவந்தது.
இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இதனிடையே இன்று மார்த்தாண்டம் காவல் துறை ஆய்வாளர் ஆதிலிங்கபோஸ், உதவி ஆய்வாளர் சுரேஷ் உள்பட மூன்று காவலர்களை ஆயுதப் படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஆய்வு செய்ய தக்கலை சரக துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு வாகனங்களையும் கோப்புகளையும் கணக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.