கன்னியாகுமரி:கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் நாளை (செப்.6) கொண்டாடப்பட உள்ளது.இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடச்சேரி பகுதியில் உள்ள ‘குட்டி குருவாயூர்’ என்றழைக்கப்படும் கிருஷ்ணன் கோயிலில் இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து இன்று (செப்.5) நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கிருஷ்ணர் வேடமிட்டு முத்து குடை ஏந்தியபடியும், குதிரையில் கிருஷ்ணன் வேடம் அணிந்த மாணவரை அமர வைத்தும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். மாணவர்கள் ஆண்டுதோறும் கிருஷ்ணர் வேடமிட்டு, கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவது வழக்கம்.
இதனையடுத்து கோயிலில் பஜனை மற்றும் விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடந்தன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தி என்பது, கிருஷ்ணர் தனது 8வது அவதாரமாகக் கிருஷ்ணர் அவதாரத்தில் அவதரித்து, இல்லங்களுக்கு வருகை தந்து மக்களை அருள்பாலிப்பதே இதன் அம்சம் ஆகும். மேலும், இந்த கிருஷ்ணர் அவதாரம், மகாவிஷ்ணுவின் மிக முக்கிய அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.