கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் பேரணி நடத்திடத் தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், அந்த அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சில கட்டுப்பாடுகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் இதனை எதிர்த்து
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
மேலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்துக் கூறப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சுமார் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த போலீஸார் அனுமதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், அருமனை ஆகிய இரண்டு இடங்களில் தற்போது ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. நாகர்கோவிலில் நாகராஜாகோயில் திடலிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் சுமார் 1000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்கு ஆர்எஸ்எஸ் கொடியினை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர்.