குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருந்நது. கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை பணிகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 13ஆம் தேதி குமரி மாவட்டம் வருவதாக இருந்தது.
இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதன்படி கலெக்டர் அலுவலக கட்டிடம் வர்ணம் பூசி புதுப்பித்தல், அலுவலக வளாகத்தில் உள்ள சாலைகளை சீர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவசர கதியில் பல கோடி ரூபாய் செலவில் அலுவலக வளாகத்தில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டது. இதற்கிடையில், முதலமைச்சரின் தாயார் மறைவைத் தொடர்ந்து அவரின் குமரி வருகை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, குமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதில், முதல் நாள் பெய்த மழையிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக போடப்பட்ட தார்சாலை பெயர்ந்து ஜல்லி தனியாக அதற்கான கலவை தனியாக வந்து விட்டது.