தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் கொட்டும் மழை.. இடிந்த வீட்டிற்குள் 80 வயது முதியவருடன் தவிக்கும் குடும்பம்.. மாற்று வீடு கட்டித்தர அரசுக்கு கோரிக்கை! - Kanyakumari District Collector

Kanyakumari: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தீவிரமடைந்துள்ள கனமழை காரணமாக, வீடு இடிந்து விழுந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள முதியவருடன் தவிக்கும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 10:40 PM IST

Updated : Nov 6, 2023, 10:49 PM IST

இடிந்த வீட்டிற்குள் 80 வயது முதியவருடன் தவிக்கும் குடும்பம்.. மாற்று வீடு கட்டித்தர அரசுக்கு கோரிக்கை!

கன்னியாகுமரி:உயிருக்கு ஆபத்தான நிலையில், 80 வயதான முதியவர் மற்றும் இரு குழந்தைகள் என பாதுகாப்பான வீடு இன்றி தவிக்கும் குடும்பத்தினரின் பசுமை வீடு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய 'பசுமை வீடு திட்டம்' தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வந்தது. ஊரக பகுதிகளில் வறுமையில் வாழும் ஏழை எளிய வீடு இல்லாத மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின்சக்தி உடன் கூடிய விளக்குகள் அமைத்து கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டமானது, அனைவருக்கும் வீடு வழங்கும் ஒரு முன்னோடி திட்டமாகக் கருதப்பட்டது. இந்த திட்டம், 100% மாநில அரசு நிதியைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. ஊரக பகுதியில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள ஏழ்மையில் வாழும் மக்களுக்கு, வீடு வழங்குவதே, இத்திட்டத்தின் உயர்ந்த நோக்கமாக இருந்தது. பசுமை வீடு திட்டம் தமிழக அரசின் முன்னோடித் திட்டம் ஆகும். ஆனால், தற்போது இந்த திட்டம் செயல்பாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆகையால், ஏழை எளிய மக்கள் வீடுகள் இல்லாமல் ஓலை குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். பழைய காலங்களில் கட்டப்பட்ட அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடு கட்டலாம் என்ற கனவோடு இருந்து வந்தனர். தற்போது, பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில் கூடாரங்கள் அமைத்து மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேல சங்கரன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். 80 வயது முதியவரான இவர் படுத்த படுகையாக உள்ளார். தானாக, எந்த வேலையும் செய்ய முடியாத இவர் தனது மகன் மற்றும் மருமகள் உதவியுடன் வாழ்ந்து வருகிறார்.

மிகவும் ஏழ்மையான குடும்பம். இவர் ஏற்கனவே, கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு 'பசுமை வீடுகள்' திட்டத்தின் கீழ், வீடு கட்டித்தர விண்ணப்பித்து இருந்தார். ஆனால், இதுவரை அவருக்கு வீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக. இவர் தங்கியிருக்கும் பழைய வீடு இடிந்து விழுந்ததில் இவர் படுகாயம் அடைந்துள்ளார்.

வேறு எங்கு செல்ல முடியாததால் அவரும் அவரது குடும்பத்தினரும், அந்த இடிந்த வீட்டிலேயே வேறு வழியில்லாமல் வசித்து வருகின்றனர். இதனை அடுத்து உறவினர்கள் இடுபாடுகளில் சிக்கி இருக்கும் அவருக்கு தங்குவதற்கு இடம் வழங்க மேல சங்கரன்குழி ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, 'மிகவும் பழைய வீட்டில் வசித்து வருவதாகவும் அந்த வீட்டின் ஒரு பகுதி மழை காலத்தில் இடிந்து விழுந்துவிட்டது. மற்ற பகுதியும் எப்போது இடிந்து விழும் என்ற பயத்துடன் வாழ்த்து வருகிறார்கள். ஏற்கனவே, இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த 80 வயது முதியவரை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல கூட வழியில்லாத நிலையில், இருப்பதால் அரசு அவருக்கு பசுமை வீடுகள் திட்டத்தில் மாற்று வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதனை அறிந்த மேல சங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன், நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ததுடன் அருகாமையில் இருந்த காலி இடத்தில் தற்போது அவர்கள் தங்கும் அளவிலான சிறிய குடிசை ஒன்றை அமைத்து கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, பசுமை வீடு திட்டத்தின் கீழ் முதியவர் சுப்பிரமணியனுக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் இணைந்து உடனடியாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆசிரியை உயரதிகாரிகள் ரேகிங் செய்ததாக புகார்.. நெல்லையில் நடந்தது என்ன?

இதுகுறித்து சிதிலமடைந்த இவ்வீட்டில் வசிக்கும் ஜெயா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பசுமை வீடு திட்டத்தில் நாங்கள் பதிவு செய்துள்ளோம். ஆனால், இதுவரையில் அரசு எங்களுக்கு இத்திட்டத்தில் வீடு கட்டித் தரவில்லை. தற்போது, தீவிரமடைந்துள்ள தொடர் மழை காரணமாக எங்களது வீடு இடிந்து விட்டது. மேலும், வீட்டின் பல பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அச்சுறுத்தலான நிலையில், இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு இவ்வீட்டில் வசித்து வருகிறோம்.

இதனிடையே, 80 வயதான முதியவரை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டுவரும் எங்களுக்கு பசுமை வீடு திட்டத்தில் உடனடியாக பாதுகாப்பாக தங்குவதற்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்' என்று பேசினார்.

இது தொடர்பாக மேல சங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் கூறுகையில், 'கன்னியாகுமரியில் பெய்துவரும் தொடர் கனமழையால், மேல சங்கரன்குழி ஊராட்சியில் உள்ள வடலிவிளை பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரது வீடு, இடிந்து விழுந்துள்ளது. இங்கு வந்து பார்த்தபோது வீடு மிகவும் மோசமான நிலையில், மின் இணைப்புக்கான மீட்டர் பெட்டிகளும் மழையில் நனைந்துள்ளன.

அதோடு, தொடர்ந்து சரிவர கண்பார்வை இல்லாத 80 வயதான முதியவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இவ்வீட்டில் இவர்கள் தங்குவதற்கு வீடு இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இவர்கள் தங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் என்ற முறையில், வேறு பகுதியில் தற்காலிகமாக குடியிருப்பு ஒன்றில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ், 2016-17 பசுமை வீடு திட்டத்திற்கு விண்ணப்பித்த போதும், இவர்களின் பெயர் மட்டும் விடுபட்டுள்ளது. இதனால், ஊராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பசுமை வீடு உள்ளிட்ட திட்டங்கள் எதுவும் வரவில்லை. இதனால், அவர்களுக்கு தனிப்பட்ட எந்த விதத்திலும் உதவ முடியவில்லை.

பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வீடு இல்லாமல் தவிக்கும் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு உடனடியாக வீடு ஒன்றை கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க:புலம்பெயர் தொழிலாளர்களின் பள்ளி செல்லாத 8 ஆயிரம் குழந்தைகள்..! கல்வி கண் திறக்க அரசு மனது வைக்க கோரிக்கை!

Last Updated : Nov 6, 2023, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details