குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியைக் கேரளாவிற்கு கடத்தி, அங்கு அதிக விலைக்குச் சில கும்பல்கள் விற்பனை செய்து வருகின்றன. காவல் துறையினர் இதனைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி புதுப்புது முறைகளில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு இந்தக் கும்பல் தொடர்ந்து கடத்தி வருகின்றது.
குமரியிலிருந்து இதற்கு முன்பு அரசுப் பேருந்து, ரயில்களின் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி வந்த இந்தக் கும்பல், தற்போது சொகுசு கார்களில் ரேஷன் அரிசியை புதுமையான முறையில் கடத்தி வருகின்றனர். இதனைத் தடுக்க மாவட்ட உணவு வழங்கல் துறையினர், பறக்கும் படை அலுவலர்கள் ஆகியோர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் ராஜாக்கமங்கலம் பகுதியில் சொகுசு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற அலுவலர்கள், காரில் கடத்த முயன்ற 400 கிலோ கிராம் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அதனைக் கடத்தி வந்த கேரள மாநிலம் சிறிய கொல்லா பகுதியைச் சேர்ந்த விகாஸ்(24) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி இதேபோல, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கேரளாவுக்குக் கடத்துவதற்காக சிறிய மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 கிலோ கிராம் ரேஷன் அரிசியையும் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ரேஷன் கடையை செயல்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர் நூதன போராட்டம்!