அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் பரிசோதித்து தகுதிச் சான்று வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து கோடை விடுமுறையில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் சோதனை நடைபெற்றது. நாகர்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட 340 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் நடந்த இந்த வாகன ஆய்வு மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில் நடந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்.
ஆய்வின்போது அவசரகால கதவு,தீயணைப்பு உபகரணம், முதலுதவி பெட்டி, பாதுகாப்பான படிகட்டு உயரம், வேக கட்டுப்பாட்டு கருவி போன்றவை முறையாக இல்லாத 25 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது.
தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்ட பள்ளி வாகனங்களின் குறைகளை சரிசெய்து ஒரு வார்த்திற்குள் ஆய்விற்கு சமர்ப்பித்து தகுதிச் சான்று பெற்றுக்கொள்ளுமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார்.