திருநெல்வேலி வடக்கு வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரது மகன் பீட்டர் மார்டின்(35). முதுகலை வணிகவியல் பட்டதாரியான இவர், திருநெல்வேலி மாவட்டக் கல்லூரிகளின் மாணவ மாணவிகளுக்கு புராஜெக்ட் போன்றவற்றைச் செய்து கொடுக்கும் நிறுவனம் நடத்துகிறார்.
இந்நிலையில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் உள்ள 20 வயது மதிக்கத்தக்க பட்டதாரி இளம்பெண், கடந்த வாரம் பீட்டர் மார்டின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அந்த இளம் பெண்ணின் குடும்ப சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திய பீட்டர் மார்டின், அவரை நேற்றிரவு வாடகை காரில் ஒருவருடன் அழைத்துக் கொண்டு கன்னியாகுமரியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் அறையைப் பதிவு செய்ய முற்பட்டுள்ளார்.
விபச்சார தொழில் செய்துவந்த தரகர்கள் ஆனால், விடுதியில் அறை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஆத்திரத்தில் அங்குள்ள ஊழியர்களுடன் தகராற்றில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாகக் குமரி காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, இருவரையும் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பீட்டர் மார்டின் தனது நிறுவனத்திற்கு வரும் பல இளம் பெண்களை, ஆசை வார்த்தை கூறி அவர்களின் புகைப்படத்தை முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கும் பாலியல் தொழில் தரகராக இருந்துள்ளார். மேலும் பீட்டர் மார்டின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது அதில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், குடும்ப பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது.
இதையடுத்து பீட்டர் மார்டினுடன் பிடிபட்ட கார் ஓட்டுநர் லட்சுமணன்(27) உட்பட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் லட்சுமணனுக்கு இன்னும் ஓரிரு நாளில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இளைஞர்களோடு பிடிபட்ட பெண்ணுக்குப் பெற்றோர் யாருமில்லாததால் அப்பெண்ணை அரசு பெண்கள் காப்பகத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.