பொங்கல் விடுமுறை தினத்தன்று, ஆண்டுதோறும் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியிலுள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூடுவது வழக்கம். நிகழாண்டு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா மையங்களில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மூன்று நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரியில் சுற்றுலா மையங்களுக்குச் செல்லத் தடை - கடற்கரை
கன்னியாகுமரி: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குத்துறை கடற்கரை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மையங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகையைக் கண்காணிக்கும் பணியில், மாவட்டம் முழுவதும் சுமார் 800 காவல்துறையினர் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குத் துறை கடற்கரை, மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு அருவி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மையங்களில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதான சுற்றுலாப் பகுதியான கன்னியாகுமரியில் ஆங்காங்கே சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தடையை மீறி, கன்னியாகுமரி கடற்கரையில் ஆபத்தான பாறைகள் மீது சுற்றுலாப் பயணிகள் ஏறி, கடல் அழகை ரசித்ததோடு, செல்பி எடுத்தனர்.
அண்மையில் இதுபோன்று தடை செய்யப்பட்ட பகுதியில் ஏறி செல்பி எடுத்த நபர்கள் கடலில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.