முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (ஜூலை 27) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் அப்துல் கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் வரக்கூடாது என ஒரு கூட்டம் செயல்படுவதால், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான திட்டங்கள் வராமல் போகிறது. விவசாய வளர்ச்சிக்கான திட்டங்களும் வரவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துறைமுகத் திட்டத்தை தொடங்கி இருந்தால், தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை வரையிலான மாவட்டங்களில் பல புதிய தொழிற்சாலைகள் உருவாகி இருக்கும். பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இந்தத் திட்டத்தை அழித்த பெருமை ஒரு சில சுயநல அரசியல்வாதிகளையும், ஒரு சில மதத் தலைவர்களையும் சாரும்” என்றார்.