கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் ஜனவரி எட்டாம் தேதி சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் இரண்டு நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைச் செய்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரும் கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு வேராவல் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தப்பிச்செல்ல முயன்றபோது உடுப்பியில் வைத்து அவர்களை அம்மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் தமிழ்நாடு காவல் துறையினர், நாகர்கோவில் நீதிமன்றத்தில் கடந்த 20ஆம் தேதி ஆஜர்படுத்தி பத்து நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பத்து நாள்கள் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், நேற்று முன்தினம் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், வில்சனைக் கொலைசெய்துவிட்டு, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை திருவனந்தபுரத்திலும் துப்பாக்கியை எர்ணாகுளத்திலும் தூக்கியெறிந்தனர் என்றும், மேலும் அவர்கள் இருவரின் உடைகளும் திருச்சூரில் இருப்பதும் தெரியவந்தது. தற்போது இருவரையும் திருச்சூர் அழைத்துச் சென்று தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.