பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை - tamilnadu
கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வர இருக்கிறார். மேலும், பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த அவர் அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் வந்தார். நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் அவர் தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார் என எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் திருவனந்தபுரம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.
அதன் பிறகு நடைபெறும் நிகழ்ச்சியின்போது, மார்த்தாண்டம்-பார்வதிபுரம் மேம்பாலங்களையும், மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பனங்குடி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கிவைக்கிறார். இவ்விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.