கன்னியாகுமரி:நாகர்கோவிலைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், இவர் பணிபுரியும் அதே பள்ளியில் படித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அவர், அந்த மாணவியிடம் நன்கு பழகி தன்னுடைய வலையில் வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவிக்கு செல்போனும் வாங்கி கொடுத்து உள்ளார். அந்த நேரத்தில் அவர், அந்த மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி உள்ளார்.
இதை நம்பிய அம்மாணவி, ஆசிரியரிடம் பழகி வந்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட அவர், மாணவியுடன் தனிமையில் இருக்கும்போது, அதனை செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இதனை வைத்து மாணவியை மிரட்டி பல முறை பாலியல் வன்புணர்வும் செய்து உள்ளார்.
இதனால் மனம் உடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்து உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர், உடற்கல்வி ஆசிரியரை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், அவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்புதான் இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிக்கு சேர்ந்து உள்ளார். மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவரது செல்போனில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும், ஆபாச வீடியோக்களும் இருந்தது தெரிய வந்துள்ளது. பெண்களிடம் வீடியோ காலில் பேசும்போது, ஆடைகளை கழற்றச் சொல்லி அதனை வீடியோவாக பதிவு செய்து உள்ளார். பின்னர் அதனை வைத்து மிரட்டி வந்தது தெரிய வந்துள்ளது.
அவரது போனில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். புகைப்படங்களில் உள்ள பெண்கள் யார் என்பது குறித்த விவரங்களை உடற்கல்வி ஆசிரியரிடம் போலீசார் கேட்டறிந்துள்ளனர். அப்போது அவர் அந்த பெண் ஒரு ஆசிரியை என்று கூறி உள்ளார். இதை கேட்டு போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். மேலும், உடற்கல்வி ஆசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்க வைத்த ஆசாமி கைது.. நெல்லையில் நடந்த பகீர் சம்பவம்!