கன்னியாகுமரியில் பத்திரப்பதிவு செய்த சொத்துக்களை விற்கவும், வாங்கவும் முடியாமல் மக்கள் அவதி கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் முத்து கிருஷ்ணன் என்பவர், மகளின் திருமணச் செலவிற்காக தனது 70 சென்ட் நிலைத்தை விற்பதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால், பத்திரப்பதிவு அலுவலர்கள் நிலத்தை விற்க முடியாது எனவும், அந்நிலத்தில் நீங்கள் கல்லறை கட்டிக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இதனால், திருமண அழைப்பிதழ் அடித்தும், திருமணங்களை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் வெளியிட்ட விடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்திரப்பதிவு செய்த சொத்துக்களை விற்க முடியாது, வீடு கட்ட அரசு அங்கீகாரம் இல்லை என்ற தமிழக அரசின் புதிய சட்ட விதிகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும், தமிழக அரசு, பத்திரப்பதிவு துறையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்ட விதிகளால் தங்களிடம் இருக்கும் நிலங்களை பத்திரப்பதிவு செய்யவோ, வாங்கவும், விற்கவும் முடியாத ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், 2 சென்ட், 3 சென்ட், 5 சென்ட் அளவில் இடங்கள் வாங்கி வீடு கட்டலாம் என்று நினைக்கும் ஏழை எளிய மக்களுக்கு, வீடு கட்ட முடியாத அளவிற்கு இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுபோன்று, அண்ணன், தம்பி பாகப்பிரிவினை சொத்துக்களும் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மகளின் திருமணத்தை நடத்த முடியாமல் தவிக்கும் முத்து கிருஷ்ணன் கூறுகையில், “மாவட்டத்தின் அமைச்சர் மனோ தங்கராஜிடம் பிரச்னையை கூறச் சென்றபோது, நான் பால் வளத்துறை அமைச்சர் இது வேறு துறையைச் சார்ந்தது என எங்களை புறக்கணித்தார். மக்களின் பிரச்னையைப் புறக்கணிக்கும் அவருக்கு அமைச்சர் பதவி எதற்கு?
70 சென்ட் நிலங்களை விற்க முடியாது எனவும், சமாதி கட்ட மட்டுமே அந்த நிலங்கள் பயன்படும் எனவும் பத்திரப்பதிவு துறை அதிகாரிகளின் அலட்சியமாக பேசுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும், குமரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால், அண்மைக் காலத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து, அண்டை மாநிலமான கேரளாவிற்குச் சென்று பத்திரப்பதிவு செய்து வருவதால், தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் பணிபுரிந்து வருபவர்களும், அங்கேயே முதலீடு செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படுகிறது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, ஏழை எளிய மக்களின் வாழ்கையை பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:FEMI9 என்ற சானிடரி நாப்கின் தொழிலை தொடங்கிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா!