கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் 100 டிகிரி செல்சியசை தாண்டி அடித்துவருகிறது. மழை பெய்யாததால் குளங்கள், ஆறுகள் ஆகியவை நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயம் செய்யாமல் நிலங்களும் வறண்டு காணப்படுகின்றன.
மேலும் அனைவரும் தங்கள் வீடுகளில் வசதிக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் நிலத்தடி நீரை எடுக்கும் வகையில் ஆழ்துளை போட்டு நீரை உறிஞ்சி எடுக்கின்றனர். ஆறு குளங்களில் நீர் இல்லாத காரணத்தினாலும் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இதனால் கடல்நீர் எளிதாக பூமிக்கடியில் வர வாய்ப்பு இருக்கிறது என இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எப்போதும் இயற்கையாகவே காட்சியளிக்கும் மலைப் பகுதிகள் இந்தக் கோடையில் காய்ந்து வெறிச்சோடி காணப்படுகின்றன. எந்தக் கோடைக்கும் காயாமல் 100 அடி ஆழம் வரை வேர்களை விட்டு செழிப்பாக நிற்கும் கற்பக விருட்சம் எனப்படும் பனை மரங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக பட்டுப்போய் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது இயற்கை நலன் விரும்பிகளிடம் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் பனை மரங்கள் தாக்குப்பிடித்து நிற்கும் என்பது வரலாறு. ஆனால் தற்போது கால சூழ்நிலை மாற்றத்தினால் பனை மரங்களே பட்டுப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாலபிரஜாபதி அடிகளார் கூறுகையில், 'தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட மரமான பனை மரம் நிலத்தில் 100 அடிக்கு கீழ் வேர்களை விட்டு தனக்கு தேவையான நீர் ஆதாரங்களை எடுத்துக் கொள்ளும். பனை மரத்திலிருந்து பயனுள்ள பொருட்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
வெயிலில் கருகும் பனை மரத்தை காக்க அரசுக்கு கோரிக்கை பனை மரம் பட்டுப்போகிறது என்றால் நிலத்தடி நீர் மட்டம் 100 அடிக்கு கீழே சென்று விட்டதாக அர்த்தம். எனவே இதைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஆறு குளங்களை தூர் வாரவும், பனை மரங்கள் பட்டுப்போவதன் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த என்னென்ன செய்ய வேண்டுமோ? அதை உடனடியாக செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.